“பாமக பொதுக் குழுவை நடத்த தடையில்லை… அறத்திற்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி!” – அன்புமணி
திட்டமிட்டபடி பாமக பொதுக் குழுவை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 9) காலை 11 மணிக்கு நடைபெறவிருந்த பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் திட்டமிட்டபடி பாமக பொதுக் குழுவை நடத்தலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.
ஏற்கெனவே அறிவித்தபடி, மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் இன்று காலை 11 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நாளைய கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம். உங்கள் அனைவரையும் சந்தித்து, ஜனநாயக முறையில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். வாருங்கள், சொந்தங்களே” என்று பாமக உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக, அன்புமணி தலைமையில் நடைபெறவிருந்த பாமக பொதுக் குழுவை தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே அண்மையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, செயல் தலைவராக நியமித்ததோடு, இனி நான் தான் பாமக தலைவராக இருப்பேன் என ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு பதிலளித்த அன்புமணி, பொதுக் குழுவின் விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை யாரும் நீக்க முடியாது என தெரிவித்தார். தற்போது பாமக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. அன்புமணி தலைமையிலான பாமக, நாளை மாமல்லபுரத்தில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என அவர் மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் இணைந்து அறிவித்தனர். இதற்குத் தடை கோரி, கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை தனியாக சந்திக்க வேண்டியிருக்கிறது என கூறி, இருவரையும் தன் அறைக்கு அழைக்க முடியுமா என நீதிபதி இரு தரப்பின் வழக்கறிஞர்களிடம் கேட்டார். அன்புமணி தரப்பு இதற்கு சம்மதம் தெரிவித்தது.
பின்னர் மாலை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறையில் அன்புமணி நேரில் ஆஜரானார். அப்போது ராமதாஸ் காணொலி வாயிலாக இணைந்தார். இருவருடனும் உரையாடல் முடிந்த பின்னர், அன்புமணி தலைமையில் நடைபெறும் பொதுக் குழுவுக்கு தடையில்லை என உத்தரவிட்டு, ராமதாஸ் தரப்பின் மனுவை தள்ளுபடி செய்தது. இது, ராமதாஸ் அணிக்கு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.