“சென்னை முழுவதும் போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது” – எடப்பாடி பழனிசாமி
சென்னை மாநகராட்சியில் முழுவதும் போலி வாக்காளர்கள் மூலமே திமுக வெற்றி பெறுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தின் போது, இன்று சாத்தூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களைச் சந்தித்து உரையாற்றினார். அவர் கூறியதாவது:
“திமுக அரசு பதவி ஏற்று 50 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த காலத்தில் குறிப்பிடத்தக்க திட்டங்களை செயல்படுத்தவில்லை. ஆனால், தமிழகம் மிகுந்த முன்னேற்றம் கண்டது போன்ற தோற்றத்தை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஏற்படுத்தி வருகின்றன.
இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து நான் பேசாததற்காக துரைமுருகன் கேள்வி எழுப்புகிறார். 86 வயதில் தவறான அறிக்கையை வெளியிடுகிறார். தற்போது ஆட்சியில் இருப்பது திமுக தானே. அதிகாரமும் ஸ்டாலினின் கையில் தான் உள்ளது. ஸ்டாலின் உத்தரவின் கீழ், அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தல், நீக்கம் செய்வது மாவட்ட ஆட்சியரின் கடமை. அதில் இப்போது அதிமுக செய்யக்கூடியது என்ன?
அதிமுக – பாஜக கூட்டணி உருவானதும், திமுகக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. வெற்றி பெற முடியாது என்ற எண்ணமே அவர்களை திணறச் செய்கிறது. அதனால் தான் அரசியல் மாற்றங்கள் செய்கிறார்கள். துரைமுருகன் அவர்களே, அதிகாரம் உங்களிடம் உள்ளது. போலி வாக்காளர்களைச் சேர்க்கிறதும் நீங்கள்தான். உண்மையில் தைரியம் இருந்தால் என் கேள்விக்கு பதிலளியுங்கள். அவர் வயதில் மூத்தவர் என்பதால் மதிப்பளிக்கிறோம், ஆனால் தவறான தகவலை வெளியிட்டால் கண்டிப்போம்.
சென்னை மாநகராட்சியின் ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் 27,779 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தையும், மாவட்டச் செயலாளர்களின் புகாரையும் புறக்கணித்தனர். போலி வாக்காளர்களை நீக்கவில்லை. நாங்கள் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் வாதாடி இப்போது நீக்கச் செய்துள்ளோம். ஒரு தொகுதியில் இத்தனை பேர் என்றால், மாநிலம் முழுவதும் எவ்வளவு போலி வாக்காளர்கள் இருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
பெரம்பூர் தொகுதியில் 12,085 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக நாங்கள் புகார் கொடுத்துள்ளோம், விசாரணை நடைபெறுகிறது. தி.நகர் தொகுதியிலும் ஆயிரக்கணக்கில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக புகார் செய்துள்ளோம்.
சென்னை மாநகராட்சியில் முழுவதும் திமுக போலி வாக்காளர்களின் மூலமே வெற்றி பெறுகிறது என்பது உண்மை. இதற்கான ஆதாரத்துடன் நீதிமன்ற உத்தரவின் படி, அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று போலி வாக்காளர்களை நீக்கியுள்ளனர். இது திமுகவின் வஞ்சகம் தானே? திமுக மக்களின் ஆதரவை இழந்துவிட்டது. 2026 தேர்தலில் திமுக கூட்டணி கடுமையான தோல்வி அடையும்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். ஆனால், அந்த நாளே அவரை விடுவித்து, புகார் அளித்தவரை கைது செய்தனர். இப்படிப் பட்ட கட்சிக்கு எங்களை விமர்சிக்க உரிமையே இல்லை. ஜெயலலிதா காலத்தில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் ஒன்றரை மணி நேரத்தில் 1,200 ஓட்டுகள் பதிவானது. நீதிமன்றம் சென்று வினவியபோது, தேர்தலை முறைகேட்டின் காரணமாக ரத்து செய்தது. கூட்டுறவு சங்கத் தேர்தலிலும் முறைகேடு நடந்ததால், திமுக அரசு தானே அதை ரத்து செய்தது.
இப்போது ஊழல் இல்லாத துறை எதுவும் இல்லை. எல்லாவற்றிலும் பணமே முக்கியம். ஊழலில் ஸ்டாலின் அரசுக்கு நோபல் பரிசு தரலாம். டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்து ஆண்டுக்கு ₹5,400 கோடி ஊழல் நடக்கிறது. சேல்ஸ்மேன்கள் மேலிட உத்தரவு என்று கூறுகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் ₹22,000 கோடி திமுக அரசு குவித்துள்ளது. மக்கள் செந்தில் பாலாஜிக்கு ‘10 ரூபாய் அமைச்சர்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
போதைப் பொருள் விற்பனை பெருமளவில் நடக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று நான் பலமுறை எச்சரித்தும் முதல்வர் கவனிக்கவில்லை. இதனால் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் நாள்தோறும் நடக்கின்றன. 2022-ஆம் ஆண்டு காவல் துறை மானியம் அறிக்கையில், பள்ளி-கல்லூரி அருகே 2,348 பேர் கஞ்சா விற்றதாக கண்டறியப்பட்டது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் 148 பேர் மட்டுமே. மீதமுள்ளவர்கள் திமுக ஆதரவாளர்கள் என்பதால் எவ்வாறு கஞ்சாவை கட்டுப்படுத்த முடியும்?
ஸ்டாலின், தனது கட்சிக் கூட்டத்தில், “காலையில் கண் திறந்தவுடன் கட்சியினரால் என்ன நிகழும் என்று பயப்படுகிறேன்” என்று சொல்கிறார். தனது கட்சியினரை கட்டுப்படுத்த முடியாதவர், குற்றங்களை எப்படிக் கட்டுப்படுத்துவார்? பொம்மை முதல்வரை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருக்கிறார்கள். கேள்வி கேட்டால் பதிலே கிடையாது. நான் சட்டமன்றத்தில் 2 மணி 50 நிமிடம் பேசியபோது, அவர், “இவ்வளவு நேரம் பேசிவிட்டீர்கள், நான் குறிப்பெடுக்க வேண்டும்” என்றார். அதனால் பேச்சை நிறுத்தினேன்.
இவ்வளவு நேரம் பேசுவது ஆட்சியில் நடக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டவே. திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து அனைத்து தரப்பினரும் – ஆசிரியர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் – போராடி வருகின்றனர். ஆனால் ஸ்டாலின் மக்களின் பிரச்சனைகளில் அக்கறை காட்டுவதில்லை. குடும்பத்தை மட்டுமே கவனிக்கிறார்.
கடன் வாங்குவதில் தமிழகத்தின் சாதனை முதல்வர் ஸ்டாலின். ஐந்தாண்டுகளில் ₹5.38 லட்சம் கோடி கடன் சுமை. அதை மக்களிடமே வசூலிப்பார்கள். ஒருநாள் தமிழ்நாட்டையே அடமானம் வைப்பார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கடனை குறைக்க நிபுணர் குழு அமைப்போம் என்றார். ஆனால், கடன் வாங்குவதற்கே குழு அமைத்தனர். பொருளாதார வளர்ச்சி 11.19% என்று கூறுகிறார். புள்ளிவிவரங்கள் மாறினாலும், மக்களுக்கு எந்த நன்மை?
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை சென்றபோது பெண்கள், “அதிமுக ஆட்சியில் நாளொன்றுக்கு ₹700-₹800 சம்பளம் கிடைத்தது; திமுக ஆட்சியில் ₹150 தான்” என்றனர். புள்ளிவிவரம் சொல்லாமல், மக்களின் நிலையைப் பார்த்து பேசுங்கள்.
மன்னர் காலத்தில் அமைச்சர்கள், “நாடு சுபிட்சமாக இருக்கிறது” என்று பொய் சொல்வார்கள்; அதையே நம்பும் நிலை இப்போது. சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு உச்சத்தில். அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டு நிதி அமைத்து 100 கோடி ஒதுக்கி, குறைந்த விலையிலான பொருட்களை வாங்கி மக்களுக்கு வழங்கினோம். அண்டை மாநிலத்திலிருந்தும் வாங்கி விலையை கட்டுப்படுத்தினோம். திமுக அதைப் பின்பற்றவில்லையே.
அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், பொங்கல் பரிசாக 2,500 ரூபாய், நல்ல தரமான பொங்கல் பொருட்கள் வழங்கினோம். திமுக கெட்டுப்போன வெல்லம் வழங்கியது. 525 அறிவிப்புகளில் 98% நிறைவேற்றியதாக பொய் சொல்கிறது. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தவில்லை. பல தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிட்டனர்.
அதிமுக ஆட்சியில் அறிமுகமான அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறுத்திவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சியில் அதை செயல்படுத்துவோம். 15 லட்சம் மருத்துவ முகாம்களை அதிமுக நடத்தியது; அதற்கு பெயர் மட்டும் மாற்றி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்று வைத்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு கொடுத்து 2,818 மாணவர்கள் மருத்துவராக உயர்ந்தனர். திமுக ஆட்சியில் வேட்டி, சேலை கொடுக்கவில்லை; மீண்டும் அதிமுக ஆட்சியில் வழங்குவோம்.
கோவிட் காலத்தில் ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள், உணவு, மாணவர்களுக்கு ஆல் பாஸ், ஆன்லைன் தேர்வு – அனைத்தும் அதிமுக காலத்தில்தான்.
சாத்தூர் தொகுதியில் அதிமுக ஆட்சியில் மருத்துவமனை, தாலுகா அலுவலகம், நீதிமன்றம், கல்லூரி, தடுப்பணை, பாலம், குடிநீர் திட்டம், 520 கோடியில் விருதுநகர் – சாத்தூர் – அருப்புக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம் – இவற்றுக்கு அடிக்கல் நாட்டினோம்.
திமுக ஆட்சியில் பணிகள் ஆமை வேகத்தில் தான் நடக்கின்றன. மீண்டும் அதிமுக ஆட்சியில் வேகமாக நிறைவேற்றுவோம். வைப்பாற்றில் கழிவுநீர் கலக்காதபடி 50 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம், மின் விளக்குகள், சாலைகள், ஒவ்வொரு கிராமத்திலும் நீர்த்தேக்கங்கள் அமைத்தோம்.
இப்போது இருக்கன்குடி அணை, வெம்பக்கோட்டை அணை தூர்வாரப்படும்; ஆலங்குளத்தில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் – அனைத்தும் அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு வரும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.