பள்ளிக் கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியீடு: பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து

பள்ளிக் கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையை நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி நடைமுறையை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்திலிருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, மாநிலத்திற்கு தனிப்பட்ட கல்விக் கொள்கையை உருவாக்கும் என்று அறிவித்தது. இதற்காக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ல் அமைக்கப்பட்டது. இக்குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு, கல்விக் கொள்கைக்கான 520 பக்க வரைவு அறிக்கையை 2023 அக்டோபரில் தயாரித்தது. தமிழக அரசுக்கு, 2024 ஜூலை 1-ம் தேதி இவ்வறிக்கையை வழங்கியது.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்வில், தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையுடன் இரு மொழிகளில் பேச, படிக்க, எழுத வைப்பது பிரதான நோக்கம். தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டத்தின் படி, மாணவர்களுக்கு கூடுதலாக தம் தாய்மொழியை கற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி நடைமுறை இருக்க வேண்டும். ஆனால், ஆண்டு இறுதி தேர்வுகளை அடிப்படையாகக் கொள்ளாமல், திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறையிலேயே தேர்ச்சி வழங்கப்பட வேண்டும்.

10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடரும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில், ‘‘பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் அறிவிப்பு இவ்வாண்டிலிருந்தே அமல்படுத்தப்படும். சமக்ர சிக்ஷா நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

3, 5, 8-ம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான கற்றல் அடைவு (SLAS) தேர்வுகள் இடைவெளிகளில் நடைபெறும். 1, 2, 3-ம் வகுப்புகளில் மாணவர்கள் தங்கள் வயதுக்கு ஏற்ப வாசிப்பு, எழுதுதல், எண்ணறிவு திறன்களை அடைவதை உறுதிப்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும்.

அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திட்டத்தின் விளைவுகளை மதிப்பிட 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிப்புற மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகங்கள் மாற்றப்படும். கற்றலில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு குறைதீர்வு கற்பித்தல் வழங்கி வயதுக்கு ஏற்ப வகுப்புக்கு கொண்டு வரப்படும். முதல் தலைமுறை கற்போர், பழங்குடியினர், பெண் குழந்தைகளை பள்ளியில் நிலைத்திருக்கச் செய்து, அவர்களது கற்றல் முன்னேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலின அடிப்படையிலான வன்முறை, பாகுபாடு, முடிவெடுக்கும் திறன் போன்ற வாழ்க்கைத்திறன்களை வளர்க்கும் கலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகளுக்காக இருமொழிக் கல்வி வளங்கள் வழங்கப்படும்.

தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை வாரத்திற்கு குறைந்தது 2 உடற்கல்வி நேரங்கள் கட்டாயமாக்கப்படும். பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுகள் இணைக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்.

மனப்பாட மதிப்பீட்டிலிருந்து விலகி, கருத்துப் புரிதல், சிந்தனை திறன், பெற்ற அறிவை புதிய சூழலில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கும் மதிப்பீட்டு முறைக்கு மாறப்படும்.

‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்தின் கீழ், வட்டார அளவில் சிறந்த 500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதிரி பள்ளிகளைப் போல கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box