இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பாம்பன் விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சீனி என்பவரின் விசைப்படகில் கடலுக்கு சென்ற தோபி யாஸ் (37), குருசாமி (39), பரத் (31), ரவி (47), ஜோஸ் பாரதி (22), மரிய பிரவீன் (31), மனோ சந்தியா (32), பிலிப்பியர் (43), மேத்யூ கினலடன் (24), டேனியல் ராஜ் (33) ஆகிய 10 மீனவர்களை, புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பரப்பில் எல்லை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் புதன்கிழமை காலை பிடித்தனர்.

இந்த 10 பேர்மீது எல்லை மீறி மீன்பிடித்தல், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆகஸ்ட் 10 வரை நீதிமன்றக் காவலில் வெளிச்சாரா சிறையில் அடைத்துள்ளனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும், இலங்கை சிறையில் உள்ளவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, பாம்பன் விசைப்படகு மீனவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாக அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக, பாம்பனில் கடலுக்கு செல்லாமல் மீன்பிடித் தளத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு இருந்தன. மேலும், 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

Facebook Comments Box