அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பட்டாசு தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள்: இபிஎஸ் உறுதி

அதிமுக ஆட்சியை அமைத்தவுடன், பட்டாசு தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் அமைத்து வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பட்டாசு ஆலையை அவர் நேரில் சென்று ஆய்வு செய்து, தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, சரவெடி தடையால் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும், வேறு தொழில்கள் தெரியாததால் வாழ்க்கையில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் பகிர்ந்துகொண்டனர். மேலும், அதிகாரிகள் எப்போது ஆய்வுக்கு வருவார்களோ என்ற பயத்தில் பணியாற்றி வருவதாகவும், பாதுகாப்பு முறைகளை பின்பற்றினாலும் அந்த அச்சத்தால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தொழிலாளர்களிடம் “உங்களுக்கு சொந்த வீடு உள்ளதா?” என்று கேட்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளுக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படும். மேலும், பட்டாசு தொழில் எந்த பிரச்சினையும் இல்லாமல், அதே சமயம் பாதுகாப்பாக நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

Facebook Comments Box