“திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப் பெற திருமாவளவன் பாடுபடுகிறார்” – சீமான் குற்றச்சாட்டு

மதுரை: “திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப் பெற, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாடுபட்டு வருகிறார்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

இன்று (ஆகஸ்ட் 9) மதுரை விமான நிலையம் வந்தடைந்த சீமான், செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்களை பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் தமிழர்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. ஆனால் இதில் ‘திராவிட மாடல்’ ஆட்சி எங்கே வருகிறது? திமுக, தமிழர் அறம் சார்ந்த ஆட்சி என சொல்ல முடியவில்லை. திராவிடம் என்பது தமிழ்ச்சொல் அல்ல; அது சமஸ்கிருதத்திலிருந்து வந்த சொல்.

பிராமண எதிர்ப்பை காட்டி திராவிடத்தை முன்னிறுத்தியது திமுக. பெரியார், அண்ணா வழியில் வந்தவர்கள் செய்யாததை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தார். உதாரணமாக, திமுக ஆட்சியில் ஆ.ராசா வெற்றி பெற்ற பெரம்பலூர் பொதுத்தொகுதியில், அவரை நிறுத்தாமல், நீலகிரி தனித்தொகுதியில் போட்டியிடுமாறு கருணாநிதி அறிவுறுத்தினார். ஆனால் ஜெயலலிதா, திருச்சி பொதுத்தொகுதியில் தலித் வேட்பாளர் எழில்மலையை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தனபாலனை சபாநாயகராகவும், உணவுத்துறை அமைச்சராகவும் நியமித்தார். இதுதான் உண்மையான மாற்றம்; இதையும் திமுக செய்யவில்லை.

இந்த தேர்தலிலாவது, திமுக பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர்களை நிறுத்துமா? திமுக, ‘பொதுக்குளத்தில் நீங்கள் குளிக்கக்கூடாது’ என்பதுபோல், ‘பொதுத்தொகுதிக்கு நீங்கள் ஆசைப்படக்கூடாது’ என கூறியுள்ளது பதிவாக உள்ளது.

ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான்; பெயர் மட்டுமே வேறுபட்டது. தேசியக் கல்விக் கொள்கையும் மாநிலக் கல்விக் கொள்கையும் ஒரே மாதிரியானவை. எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாத தேர்ச்சி அளிக்க வேண்டும் என்றே கல்வி அறிஞர்களின் கொள்கை. திமுக, தேசியக் கல்விக் கொள்கையை மொழிபெயர்த்தே செயல்படுத்தி வருகிறது.

அறிவு வளர்க்கும் கல்வி மற்றும் உயிர் காக்கும் மருத்துவம் இரண்டும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது, கல்வி மற்றும் மருத்துவம் இரண்டும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பெற வேண்டிய நிலையில் உள்ளன. திமுக ஆட்சியில் கல்வி, மருத்துவம் இரண்டும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேலும், ‘கிங்டம்’ திரைப்படத்தில் அறம் சார்ந்து வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றை அரக்கர்கள் என கொச்சைப்படுத்தியுள்ளனர். அந்த திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் ஓடவிடமாட்டோம்” என சீமான் தெரிவித்தார்.

Facebook Comments Box