தேர்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக குற்றச்சாட்டு

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லையென ராகுல் காந்தி தெரிவித்ததற்கு எதிராக, அவர் தார்மிக அடிப்படையில் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா,

“இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நம்பிக்கை இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் கோரிய புகார் கடிதம் மற்றும் ஆவணங்களை வழங்குவதையும் மறுக்கிறார்.

அப்படியானால், தார்மிக அடிப்படையில் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல், பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தியும் தங்கள் எம்பி பதவிகளை விட்டு விலக வேண்டும். பின்னர் அவர்கள் உச்ச நீதிமன்றம் அல்லது மக்களிடம் சென்று தங்கள் நிலைப்பாட்டை விளக்கலாம்.

காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால், காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேச முதல்வர்களும் ராஜினாமா செய்ய வேண்டும். உங்களுக்கு சாதகமாக இருந்தால் ஏற்றுக்கொள்கிறீர்கள்; சிரமமாக இருந்தால் நிராகரிக்கிறீர்கள் – இத்தகைய அணுகுமுறை வேலை செய்யாது.

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பாரபட்சமற்ற அமைப்பு என்ற நற்பெயரை பெற்றுள்ளது. கடந்த கால உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு பொய்யானது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக அவர் செயல்படுகிறார்” என்று அவர் குற்றம்சாட்டினார்.

முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், சில ஆதாரங்களை பத்திரிகையாளர்களிடம் வெளியிட்டார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு ஆதாரம் வழங்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரித்தது.

இதற்கிடையில், தனது எக்ஸ் வலைத்தளத்தில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்திடம் 5 கேள்விகளை எழுப்பினார்:

  1. மின்னணு வாக்காளர் பட்டியலை எதிர்க்கட்சிகளுக்கு ஏன் வழங்கவில்லை? எதை மறைக்கிறீர்கள்?
  2. தேர்தல் முடிந்து 45 நாட்களில் சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகளை ஏன் அழிக்கிறீர்கள்?
  3. கள்ள வாக்குகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றம் ஏன்?
  4. எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவது ஏன்?
  5. தலைமை தேர்தல் ஆணையம் பாஜகவின் ஏஜென்டாக மாறிவிட்டதா என்பதை தெளிவாக கூறுங்கள்.

ராகுல் காந்தியின் இந்த கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தற்போது கடும் பதிலடி கொடுத்துள்ளது.

Facebook Comments Box