பாஜக அரசு சர்வாதிகார ஆட்சிக்குத் திட்டமிட்டுள்ளது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குற்றச்சாட்டு

பாஜக அரசு இந்தியாவில் சர்வாதிகார ஆட்சியை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே. எம். காதர் மொகிதீன் குற்றம் சாட்டினார்.

நாகூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்தியிலும் ஆளும் பாஜக அரசு அரசியலமைப்பிற்கு புறம்பாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வருடத்திற்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே வாக்காளர் பட்டியலை திருத்தலாம். ஆனால், சட்டத்தில் இல்லாத வகையில் பிஹாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

“அந்த மாநிலத்தின் ஒரு தொகுதியில் ஒரே இடத்தில் 4,000 வாக்குகள் எப்படி வந்தன என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அதுகுறித்து தகவல் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறுவது அபத்தம். இது சாதாரண விஷயம் அல்ல. நமது நாடு அரசியலமைப்புச் சட்டப்படி நடக்கிறதா என்ற கேள்வியே எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. பிஹாரில் நடப்பது, நாளை தமிழகத்திலும் நிகழலாம். மத்திய ஆட்சியாளர்கள் விரும்பியது சட்டமாக்கப்படுகிறது. இந்தியாவில் சர்வாதிகார ஆட்சியை அமல்படுத்த பாஜக அரசு திட்டமிட்டு இத்தகைய செயல்களை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்து அனைத்து கட்சிகளுக்கும் உரிமை உண்டு. ஆனால், திமுக கூட்டணிதான் வலிமையானது” என அவர் கூறினார்.

Facebook Comments Box