தமிழ்நாடு மணல் கழகம் அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தாக்கல் செய்த மனு – உயர் நீதிமன்றம் நிராகரிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,
“தமிழகத்தின் ஆறுகள், அரசு நிலங்கள் மற்றும் ரயத்துவாரி பகுதிகளில், சட்டவிரோதமாக குவாரிகள் செயல்பட்டு விதிகளை மீறி உவர், சவடு, கிராவல் மணல் எடுக்கப்படுகிறது. இதனால் இயற்கை வளங்கள் கடுமையாக சேதமடைகின்றன.
வைகை, காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில் மணல் எடுப்பதால், இயற்கையான நீரோட்டம் பாதிக்கப்பட்டு, பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கூட சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
பட்டா நிலங்களில் மண் எடுப்பதால் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே, டாஸ்மாக் நிறுவனம் போல, மணல் மற்றும் மண் அகழ்வு, விற்பனையை ஒழுங்குபடுத்த ‘தமிழ்நாடு மணல் கழகம்’ (TAMSAC) உருவாக்க வேண்டும். அதுவரை, மணல் மற்றும் மண் எடுக்கும் உரிமம் வழங்க தடை விதிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரியகிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் அவர்கள்,
“இது அரசின் கொள்கை தீர்மானம் சார்ந்த விஷயம். நீதிமன்றம் இதில் தலையிட்டு, அரசுக்கு நேரடி உத்தரவு வழங்க இயலாது” எனக் கூறி, மனுவை நிராகரித்தனர்.