‘தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றியது பாஜக’ – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாஜக, தேர்தல் ஆணையத்தை தன் தேர்தல் சூழ்ச்சிகளுக்கான கருவியாக மாற்றிவிட்டதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது:

“பெங்களூரின் மகாதேவபுரா தொகுதியில் நடந்தது சாதாரண நிர்வாக பிழையல்ல; மக்கள் அளித்த தீர்ப்பை பறிப்பதற்கான திட்டமிட்ட சதி. ராகுல் காந்தி வெளிப்படுத்திய ஆதாரங்கள், இந்த முறைகேடு எந்த அளவிற்கு நடந்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. இன்று, ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குப் பேரணியாக செல்லும் நிலையில், நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்:

  • கணினி வாசிக்கக் கூடிய வடிவில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்புகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  • அரசியல் நோக்கத்துடன் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்குவது நிறுத்தப்பட வேண்டும்.
  • மக்களாட்சியை பாதிக்கும் வாக்குத் திருட்டு குறித்த முறைகேடு குறித்து சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த போராட்டத்தில் திமுக உறுதியாக பங்கேற்கும். மக்களாட்சியை பாஜக பகலிலேயே பறிக்க முயல்வதை நாங்கள் அமைதியாக பார்க்கமாட்டோம்.”

முன்னதாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போலியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும், பலர் பெயர்கள் நீக்கப்பட்டதும் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

அவர் மேலும், “வாக்கு திருட்டு என்பது ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்ற ஜனநாயகக் கொள்கைக்கு நேரடியான தாக்குதலாகும். தேர்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்பட்டு, மின்னணு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்காக புதிய இணையதளம் மற்றும் பிரச்சார எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 11.30 மணிக்கு, ராகுல் காந்தி தலைமையில், 25 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்கும் ‘இந்தியா கூட்டணி’ பேரணி, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி நடைபெறுகிறது.

Facebook Comments Box