பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்தை உருவாக்கியோரின் சிலைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் உயிர் நதியாகவும், பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டம் உருவாக காரணமான, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியம் மற்றும் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நா. மகாலிங்கம், வி.கே. பழனிச்சாமி கவுண்டர் ஆகியோரின் நினைவாக சிலைகள் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு 4.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதன்படி, பொள்ளாச்சி உடுமலை சாலையில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் 1.25 ஏக்கர் பரப்பளவில், 4.25 கோடி மதிப்பில் காமராஜர் உள்ளிட்ட நால்வரின் சிலைகள், பயிற்சி அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டன.

பணிகள் முடிந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்ட உடுமலையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பிறகு, முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி நீர்வளத்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் மற்ற நால்வர் சிலைகளை திறந்து வைத்து, அவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.கே. பழனிச்சாமி கவுண்டர் மற்றும் நா. மகாலிங்கம் அவர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவு அரங்கத்தை திறந்து வைத்து, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதன் போது, பொள்ளாச்சி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இரு புறமும் முதல்வரை வரவேற்றனர்.

Facebook Comments Box