ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்
ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தன் சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:
“சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைக் கடுமையாக கண்டிக்கிறோம்.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் நான் கூறியதுபோல், நம் நாடு முழுமையான வளர்ச்சியை அடைய ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு அரசியலமைப்புச் சட்டமும், அதன் பொறுப்பு ஒவ்வொருவரின் கதமையும் ஆகும். ஜனநாயகத்தின் அடிப்படை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்துதலே எனது வலியுறுத்தல். தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்.
மேலும், பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியானதும், அது ஜனநாயக உரிமைகளை கேள்விக்குறியாக்கும் என்று தமிழ்நாட்டில் முதன்முதலில் தமிழ்நாடு வெற்றிக் கழகம் குரல் எழுப்பியது. எனவே அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தை காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகிறேன்” என்று விஜய் தெரிவித்தார்.