பருவதமலை இறங்கும் போது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்பு
சென்னையில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்ற குழுவினர், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனர்–பிரம்மாம்பிகை கோயில் அமைந்துள்ள 4,560 அடி உயரமுள்ள பருவதமலையில் ஏறிச் சென்றனர்.
சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, கீழே இறங்கியபோது கனமழையால் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓடையை கடக்க முயன்றபோது, சென்னை வடபழனியைச் சேர்ந்த சங்கத்தமிழ் (36) மற்றும் திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த இந்திரா (58) ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை பார்வையிட்டனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினரின் உதவியுடன், இந்திராவின் உடல் சம்பவ இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் மற்றும் சங்கத்தமிழின் உடல் சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள கோயில்மாதிமங்கலம் ஏரிக்கரையில் மீட்கப்பட்டது.
இரு உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.