பாம்பன் புதிய ரயில் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதம்
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழை காரணமாக, ராமேசுவரத்திற்கு வரவேண்டிய மற்றும் ராமேசுவரம் இருந்து புறப்படும் ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
பாம்பனில் அமைந்த புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்து வைத்தார். அடுத்த நாள், ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் ராமேசுவரத்திலிருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை, கன்னியாகுமரி, கோவை மற்றும் வடமாநிலங்கள் நோக்கி ரயில்கள் இயக்கப்படத் தொடங்கின. இந்த புதிய பாலத்தில் கப்பல்கள் மற்றும் படகுகள் கடந்து செல்லும் வகையில் செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள முதல் செங்குத்து தூக்குப் பாலாகும் பெருமையை பெற்றுள்ளது.
ஆனால், பயன்பாட்டிற்கு வந்த பிறகு, இந்த தூக்குப் பாலம் திறக்க மூடுவதில் இரண்டு முறை தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டது. இதனால் ரயில்வே போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது. இந்தக் கோளாறுகளை சரி செய்வதற்காக, ரயில்வே பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த 5 நாட்களாக கம்பிவடம், சக்கரங்களில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில், ரயில்வே ஊழியர்கள் புதிய பாம்பன் பாலத்தின் நடுப்பகுதியில் உள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை பராமரிப்பதற்காக தூக்கி இறக்க முயன்றனர். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாலத்தை உடனடியாக கீழே இறக்க முடியவில்லை. பின்னர், சுமார் 3 மணி நேரத்திற்குப் பின் செங்குத்து தூக்குப் பாலம் கீழே இறக்கப்பட்டது. ஆனால், தண்டவாளத்துடன் சரியாக இணைக்கப்படாமையால் தூக்குப் பாலம் ஏற்ற இறக்க நிலைமையில் இருந்தது. அதனையும் உடனடியாக சரிசெய்தனர்.
இதனால் ராமேசுவரம் வரவேண்டிய ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன; ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ரயில்களும் அக்காள்மடம் பகுதியில் நிறுத்தப்பட்டன. பின்னர் ரயில்வே போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.