முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே சென்றடைந்து வழங்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக, இத்திட்டம் அறிமுகமானது. இதன் மூலம், 70 வயதுக்கு மேற்பட்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 மூத்த குடிமக்கள் மற்றும் 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 21,70,454 பயனாளிகள் பலனடைவார்கள்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சேவை வழங்கப்படும். மின்னணு எடைத்தராசு, விற்பனை முனைய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும். இதற்காக அரசுக்கு கூடுதலாக ரூ.35.92 கோடி செலவாகும்.
சென்னை தண்டையார்பேட்டை, கோபால் நகர், அன்னை சத்யா நகரில் முதல்வர் நேரில் சென்று பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
சமூக வலைதளக் காணொலியில் முதல்வர், “இது என் மனதுக்குப் பிடித்த திட்டம். நோக்கம் 100% நிறைவேறும் வகையில், அதிகாரிகள் பயனாளிகளுடன் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
பயனாளிகள், “ரேஷன் கடைகளுக்கு செல்லும் சிரமம் இனி இல்லை. வீடு தேடி பொருட்கள் வந்து சேர்வது வரப்பிரசாதம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.