சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் இரண்டாம் நாளாக வருமான வரி சோதனை

சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில், இரண்டாம் நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சிவகாசியில் செயல்படும் 2 பட்டாசு நிறுவன உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வடமாநிலங்களுக்கு பட்டாசுகளை கொண்டு செல்லும் 2 டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உட்பட மொத்தம் 8 இடங்களில், கடந்த முன்தினம் காலை 10 மணி முதல் சோதனை தொடங்கப்பட்டது. இதில் பட்டாசு விற்பனை ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை பதிவுகள் உள்ளிட்ட பல தகவல்கள் கைப்பற்றப்பட்டன. உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

நேற்றும் காலை 10 மணி முதல் அதே 8 இடங்களிலும் சோதனை தொடர்ந்தது. டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் இருந்து எவ்வளவு பட்டாசுகள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன, யார் மூலம் அனுப்பப்பட்டன போன்ற விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

வடமாநிலத்தின் ஒரே இடத்தில் அதிக அளவில் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதில், அதற்கு வரி செலுத்தப்படவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, அந்த பட்டாசுகளை தயாரித்த நிறுவனங்கள் மற்றும் கொண்டு சென்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் சோதனை நடைபெறுவதாகவும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments Box