தூய்மை பணியாளர் பிரச்சினை விரைவில் தீர்வு காணப்படும் – அமைச்சர் கே. என். நேரு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினை, ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.

திருச்சி உறையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களை நான் சந்திக்கவில்லை என்பது தவறு. கடந்த நான்கு நாட்களாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

பணி நிரந்தரத்துக்கான முடிவு முதல்வரின் அதிகாரத்தில் உள்ளது. ஏற்கெனவே 17,000 பேரை நிரந்தரப் பணியில் அமர்த்தியுள்ளோம் என முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால், துப்புரவு பணிக்காக நியமிக்கப்பட்டவர்களை வேறு பணிகளில் பயன்படுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் துப்புரவு பணியில் சிக்கல்கள் உள்ளன. பணி நிரந்தரம் ஒரே நாளில் செய்யக்கூடிய விஷயம் அல்ல. ஓரிரு நாட்களில் இப்பிரச்சினை தீர்க்கப்படும். குப்பை குவிவதைத் தவிர்க்க, உள்ள பணியாளர்களை பயன்படுத்தி சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன; புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை.

தெரு நாய்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படும். நிதிநிலை பொருத்து தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்; அனைத்தையும் ஒரே நாளில் செயல்படுத்த முடியாது” என்றார்.

Facebook Comments Box