‘வாக்கு திருட்டு’ மற்றும் பிஹார் SIR நடவடிக்கைக்கு கண்டனம் – திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானம்
சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்குத் தடையாகக் கருதப்படும் ‘வாக்கு திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிரத் திருத்தம்) நடவடிக்கைகளை எதிர்த்து, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், இந்த இரண்டு விவகாரங்களையும் எதிர்த்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
தீர்மானம் – 1
தேர்தலின் அடிப்படை ஆவணமான வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும் பிழையின்றியும் தயாரிக்கப்படுவது சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்குப் பிரதான அம்சம் என கூட்டம் வலியுறுத்துகிறது.
பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள், சொத்து தொடர்பான காரணங்களை மேற்கோள்காட்டி, தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் எனக் கூட்டம் கண்டனம் தெரிவித்தது. உச்சநீதிமன்றம் “Mass deletion” இருந்தால் தலையிடுவோம் என்று எச்சரித்த பிறகும், தேர்தல் ஆணையம் எடுத்த இந்த முடிவு, தேர்தல் களத்தின் சமநிலையை குலைக்கும் செயல் என கூறப்பட்டது.
இந்திய கூட்டணிக் கட்சிகளின் பேரணியை தடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆணவத்தையும், தேர்தல் ஆணையத்தின் பா.ஜ.க. சார்பான செயல்பாடுகளையும் கூட்டம் கடுமையாக கண்டித்தது.
தீர்மானம் – 2
திராவிட முன்னேற்றக் கழகம் முன்வைத்த கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று, நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் கூட அரசியல் சாயம் வெளிப்படுவதும், பா.ஜ.க.வுடன் தேர்தல் ஆணையம் இணைந்து செயல்படுவதும் ஜனநாயகத்துக்கு கேள்விக்குறி எனக் கூறப்பட்டது.
திமுக எம்.பி.க்கள் கடந்த ஜூலை 17-ஆம் தேதி, இறந்த வாக்காளர்களை நீக்குதல், BLO-BLA ஒருங்கிணைப்பு, பிராந்திய மொழி கையேடுகள், அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் தெளிவு, ஆதார் மற்றும் பிற அடையாள ஆவணங்களை அங்கீகரித்தல் போன்ற 5 முக்கிய கோரிக்கைகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனுவாக வழங்கியதை கூட்டம் பதிவு செய்தது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் தொடங்கும் முன், வாக்காளர் பட்டியலை முழுமையாகச் சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தீர்மானம் – 3
“ஓரணியில் தமிழ்நாடு” முழக்கம், ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்து, உறுப்பினர் சேர்க்கையில் பெரும் வெற்றியைத் தந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் கூட்டம் நன்றி தெரிவித்தது.
இந்த இயக்கம், மாநிலம் முழுவதும் திமுகவின் வலிமையை நிரூபித்ததோடு, மதவெறி சக்திகளுக்கும், தமிழகத்துக்கு தீங்கு விளைவிக்க முயல்வோருக்கும் இடமில்லை என்பதை வெளிப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
மாவட்டம், மாநகரம், ஒன்றியம், பகுதி, பேரூர், வட்டம், கிளை உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும், வீடு தோறும் சென்றடைந்து உறுப்பினர் சேர்க்கையில் பங்காற்றிய பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கூட்டம் பாராட்டுத் தெரிவித்தது.