தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடந்தால் சட்ட, அரசியல் ரீதியாக எதிர்ப்போம் – திமுக

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், அதை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் திமுக தயாராக இருப்பதாக, அந்தக் கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தல் ஆணையத்திற்கு 5 கோரிக்கைகள் கொண்ட மனுவை சமர்ப்பித்துள்ளோம். அதில் முதல் கோரிக்கை – 01.05.2025 தேதியிட்ட தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி, இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இரண்டாவது – தேர்தல் ஆணையத்தின் கையேடுகள் தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. அவற்றை தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளிலும் வழங்க வேண்டும்.

மூன்றாவது – பாக நிலை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நியமிக்கும் பாக நிலை முகவர்கள் இணைந்து செயல்படுவதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். நான்காவது – வாக்குப் பதிவில் ஏற்பட்ட சில தவறான திருத்தங்களை நீக்க வேண்டும்.

ஐந்தாவது – பிஹாரில் போல, தமிழகத்திலும் நடைபெறவுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டையை வாக்காளர் அடையாள ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஐந்தாவது கோரிக்கையை தவிர, மற்ற நான்கு கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றார்.

மேலும், பிஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் விளைவாக சுமார் 65 லட்சம் பேர் வாக்குரிமையை இழந்துள்ளதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் தரவில்லை என்றும் அவர் கூறினார். “தமிழகத்தில் இதுபோன்று சிறப்பு திருத்தம் நடந்தால், சட்ட, அரசியல் ரீதியாக எதிர்ப்போம்; ஒரே ஒரு வாக்காளரும் அநியாயமாக நீக்கப்படக் கூடாது என்பதே எங்கள் கடமை” என்றார்.

இளங்கோ மேலும் கூறுகையில், “சிறப்பு திருத்தத்தின் போது, ஒவ்வொரு வாக்காளரும் படிவம் நிரப்ப வேண்டும். 2003 பட்டியலில் பெயர் உள்ளவர்கள் படிவம் மட்டுமே நிரப்பினால் போதும். இல்லையெனில், இருப்பிட மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் தேவைப்படும். சாதாரண மக்களிடம் இவை அனைத்தும் இருக்குமா என்பது கேள்விக்குறி.

வீடு வீடாகச் செல்லும் பணி உண்மையில் நடைமுறைக்கு வரும் வகையில், பாக நிலை அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பாக நிலை முகவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பிஹாரில் நடந்த போலியான நீக்கங்கள், தமிழகத்தில் நடக்கக் கூடாது. மேலும், 6 கோடி 34 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு மாத அவகாசம் போதாது; குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் அவசியம்” என தெரிவித்தார்.

“உண்மையான வாக்காளர்களைச் சேர்த்து, போலியானவர்களை நீக்கி, சரியான பட்டியலை உருவாக்குவதே எங்கள் நோக்கம். வாக்காளர் ஆகும் தகுதிகள் – இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், 18 வயது நிரம்பியிருக்க வேண்டும், அந்த இடத்தில் சாதாரணமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வரும் ஒருவர், இங்கே நிரந்தரமாக வசிக்கிறேன் என்பதை நிரூபிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை பட்டியலிட்டுள்ளது. ஆதார் தவிர, பட்டா போன்ற அரசாங்க ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். முன்பு பாஜக, காங்கிரஸ் ஆட்சியில் ஈவிஎம் அறிமுகப்படுத்தியபோது, தேர்தல் ஆணையம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என கூறியது. ஆனால் இப்போது, பாஜக தான் வாக்காளர் பட்டியல் திருத்தங்களில் முறைகேடு செய்து, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெற்றி பெற்று வருகிறது,” என்றார்.

Facebook Comments Box