சேலத்தில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாடு தொடக்கம் – நாளை முதல்வர் ஸ்டாலின், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநில மாநாடு இன்று சேலத்தில் ஆரம்பமாகிறது. ஆகஸ்ட் 18 வரை நடைபெறும் இந்த மாநாட்டின் நாளைய (ஆகஸ்ட் 16) நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள நேரு கலையரங்கில் இன்று மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு மற்றும் முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி மாநாட்டுக் கொடியேற்றம் செய்கிறார்கள். தொடக்க உரையை தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா நிகழ்த்துகிறார். தொடர்ந்து, அமர்ஜித் கவுர், டாக்டர் கே. நாராயணா, ஆனி ராஜா, சி. எச். வெங்கடாசலம், டி. எம். மூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

நாளை மாலை, மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் எழுச்சி மாநாடு தொடங்குகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நிறைவு உரை வழங்குகிறார்.

திக தலைவர் கி. வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன், சிபிஐ (மா-லெ விடுதலை) மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே. எம். காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் உரையாற்ற உள்ளனர்.

மாநாட்டின் நிறைவு நாளான ஆகஸ்ட் 18 அன்று, பேரணி மற்றும் சேலம் போஸ் மைதானத்தில், பொதுச் செயலாளர் டி. ராஜா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

Facebook Comments Box