சென்னையில் நாய் கடி சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கை என்ன? – அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை நகரில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு நாய்கள் கடித்ததாக கிடைத்த தகவல் நீதிபதிகளை அதிர்ச்சியடைய வைத்தது. இதையடுத்து, நாய் கடி சம்பவங்களை தடுக்கும் திட்டம் உருவாக்கி, விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையில் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் ராட்வீலர் நாய்களும், தெருநாய்களும் சிறுவர்கள் மற்றும் பெண்களை கடித்த சம்பவங்களின் பின்னர், நாய்களை கட்டுப்படுத்த கோரி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘வாய்மூடி அணியாமல் தெருக்களில் அழைத்துச் செல்லப்படும் ராட்வீலர் போன்ற வளர்ப்பு நாய்களையும், ஆக்கிரமித்து சுற்றும் தெருநாய்களையும் பிடித்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரினார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, சென்னை மாநகராட்சியின் முதன்மை கால்நடைத் துறை அதிகாரி ஜெ. கமால் ஹூசைன் ஆஜராகி அறிக்கை அளித்தார்.

அதில், ‘மாநகராட்சி எல்லைக்குள் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் உரிமம் பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆன்லைனில் உரிமம் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்நாய்களால் பொது சுகாதாரத்துக்கு ஏற்படும் மலம் கழித்தல், கடித்தல் போன்ற விளைவுகளுக்கு உரிமையாளரே பொறுப்பாக இருக்க வேண்டும்’ என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஆகஸ்ட் 9 முதல் வெறிநாய் தடுப்பூசி போடும் பெரும் திட்டம் தொடங்கப்பட்டு, 200 வார்டுகளிலும் 60 நாட்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ‘‘சென்னையில் எத்தனை நாய் கடி சம்பவங்கள் நடந்துள்ளன?’’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு கால்நடைத்துறை அதிகாரி, ‘‘கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20 ஆயிரம் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம்’’ என்றார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு மீண்டும் அதே இடத்தில் விடுவதற்குப் பதிலாக, தனி காப்பகங்களில் பராமரிக்கலாம் என பரிந்துரைத்தனர்.

பின்னர், தெருநாய் பிரச்சினையில் உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருவதால், நாய் கடி சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Facebook Comments Box