“பிரதமராக மோடி இருக்கும் வரை…” – கூட்டணி குறித்து சிராக் பாஸ்வான் தெளிவான பதில்

பிரதமர் நரேந்திர மோடி பதவியில் இருக்கும் வரை, தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகும் எண்ணமே இல்லை என்று மத்திய அமைச்சர் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அவர் மாநில அரசியலில் கவனம் செலுத்துவதாகவும், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் நகர்வுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனிடையே, எல்ஜேபி(ஆர்வி) கூட்டணியில் இருந்து விலகப் போவதாகவும் வதந்திகள் பரவின.

அதை மறுத்த சிராக் பாஸ்வான், “என்னை என்டிஏ-விலிருந்து பிரிக்க திட்டமிட்டு இத்தகைய செய்திகள் பரப்பப்படுகின்றன. 2020-ல் நிலவிய அரசியல் சூழலை மீண்டும் உருவாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை, என்டிஏ-விலிருந்து விலகும் எண்ணமே எனக்கில்லை” என்று கூறினார்.

எல்ஜேபி(ஆர்வி) பிஹார் அரசியலில் பட்டியல் சமூக வாக்குகளைப் பெருமளவில் பெற்றுள்ளது. 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், பல இடங்களில் வெற்றி-தோல்வியை தீர்மானித்தது.

அந்த தேர்தலில், ஒரு இடத்தில் வென்றதுடன், ஒன்பது இடங்களில் இரண்டாம் இடமும், 93 இடங்களில் மூன்றாம் இடமும், 32 இடங்களில் நான்காம் இடமும் பெற்றது. பல இடங்களில் 10% முதல் 30% வரை வாக்குகள் ஈட்டியது.

அப்போது என்டிஏ கூட்டணியில் இருந்திருந்தால், கூடுதலாக 27 இடங்களில் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கலாம். மேலும், எல்ஜேபி போட்டியிட்டதால் மகாகத்பந்தன் 31 இடங்களில் தோல்வியடைந்தது.

2024 மக்களவைத் தேர்தலில் என்டிஏ அணியில் 5 இடங்களில் போட்டியிட்ட எல்ஜேபி(ஆர்வி) அனைத்திலும் வெற்றி பெற்றது. எனவே, 2025 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

Facebook Comments Box