தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் – அன்புமணி
சென்னை: தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கோரிக்கைகளை புறக்கணித்து, வெறும் அரசியல் நாடகங்களில் ஈடுபடுவதாக தமிழக முதல்வர் மீது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் பணிநிலைப்படுத்தல் மற்றும் தனியார் மயத்தை ரத்து செய்யும் கோரிக்கையுடன் 12 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை அரசு கவனிக்கவில்லை. மாறாக, நள்ளிரவு நேரத்தில் காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறை மேற்கொண்டது. இப்போது அதே அரசு, அவர்களுக்காக நலத்திட்டங்களை அறிவித்து, ‘ஆபத்பாந்தவன்’ போல நடித்து நாடகமாடுகிறது. இது இரட்டை வேடம்” என்று குற்றம்சாட்டினார்.
போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எளிமையானவை என்றும், அவை – 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்குதல் மற்றும் மாநகரப் பகுதிகளில் குப்பை அகற்றும் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்காமல் மாநகராட்சி மூலமே செய்யுதல் – எனவும் அவர் விளக்கினார். “இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சட்ட ரீதியான தடைகள் எதுவும் இல்லை. ஆனால், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2,300 கோடி மக்கள் வரிப்பணத்தை வழங்குவதே அரசின் முன்னுரிமையாக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
போராட்ட காலத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்திக்காமல், காவல்துறையின் மூலம் அடக்குமுறை நடத்தி, பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் சில திட்டங்களை அறிவித்தது, அவர்களின் உரிமைகளை மறைத்து சலுகைகள் வழங்கும் போலி காட்சியை ஏற்படுத்துவதாக அன்புமணி குற்றம்சாட்டினார். “இது புளித்துப் போன பழைய நாடகம்; கலைஞர் காலத்திலிருந்து நடந்து வரும் அரசியல் பாசாங்கின் தொடர்ச்சி” என்றும் அவர் கூறினார்.
“பணி நிலைப்பு மற்றும் தகுந்த ஊதியம் வழங்கப்பட்டால், தூய்மைப் பணியாளர்கள் இலவச காலை உணவுக்காக கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது. அவர்கள் தாங்களே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆனால், அரசு அவர்களை எப்போதும் சார்ந்தவர்களாக வைத்திருக்க விரும்புகிறது. உண்மையான மகிழ்ச்சியும் கண்ணியமான வாழ்க்கையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டுமெனில், அரசாங்கம் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தினார்.