பிஹார் போல தில்லுமுல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் தொடங்கியது. நான்கு நாள் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளில் கம்யூனிஸ்ட் தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதை, திருப்பூரில் இருந்து வந்த தியாகச்சுடர் பெறுதல், தியாகிகளுக்கு நினைவஞ்சலி ஆகியவை நடைபெற்றன.
சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மூர்த்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். மாநாடு தொடங்கியதும் மறைந்த தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அரசியல் விளக்கவுரை கூட்டத்தை மாநிலச் செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். தேசிய செயலாளர்கள் அமர்ஜித் கவுர், நாராயணன், ஆனி ராஜா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
“திமுக தலைமையிலான இந்த கூட்டணி வலுவான கூட்டணி; சனாதனத்தை எதிர்க்கிற கூட்டணி; பாஜக, சங்பரிவாரங்களை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் தடுக்கும் கூட்டணி. ஆனால் தில்லுமுல்லு வேலைகளை செய்து நம்மை வீழ்த்த அவர்கள் முயற்சிக்கலாம்.
எப்படியெல்லாம் இதை நாம் எதிர்கொள்ளப் போகிறோம், அதை முறியடிக்க போகிறோம், மக்களிடம் எப்படி அம்பலப்படுத்தப் போகிறோம் என்பதே முக்கியம். வலதுசாரிகளை எதிர்கொள்வதற்கு இடதுசாரிகளின் வலிமை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.
இடதுசாரிகளின் வலிமை என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கருத்தோடு இணைந்து இயங்கக்கூடிய ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையாகும். அது சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெறுவதில் மட்டும் அல்ல. தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்பதே இன்றைய சவால். அனைத்து ஜனநாயக கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே உண்டு.
தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்து பிஹாரில் தில்லுமுல்லு வேலைகளை செய்து வருவதை பார்க்க முடிகிறது. அமித்ஷா தொடர்ந்து, 2026-ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வரும் என்று கூறுகிறார்.
பிஹார் தில்லுமுல்லு குறித்து ராகுல் காந்தி ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார். இதுபோலவே தமிழகத்திலும் பாஜக தில்லுமுல்லு வேலை செய்து ஆட்சியை கைப்பற்ற முயல்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா தேர்தல்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அரசியலமைப்பை சிதைக்க, ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தேர்தல் ஆணையத்துடனும் சேர்ந்து பாஜக – சங்பரிவார்கள் முயற்சி செய்கின்றனர். அதை எதிர்கொள்ளும் வகையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால் பிஹார் போலவே எஸ்ஐஆர் தில்லுமுல்லு செய்து நம்மை வீழ்த்த அவர்கள் முயற்சிக்கலாம்.
காங்கிரஸ், இடதுசாரிகள் இல்லாத பாரதம்; திராவிட கட்சிகள் இல்லாத தமிழகம் என பாஜக பேசும் நிலை உள்ளது. இது தேர்தல் முழக்கம் அல்ல, அரசியல் முழக்கமும் அல்ல; பாரம்பரிய கோட்பாடு பின்னணியாகும். பாசிசம் முற்றியுள்ள நிலையில், அதை வீழ்த்த வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ‘ஜனநாயகம் வெல்ல வேண்டும்’ என்று கூறுகிறது. இப்படிப்பட்ட போராட்ட களத்தில் விடுதலை சிறுத்தைகள் உறுதுணையாக இருக்கும்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.