சுதந்திர தினத்தில் ராமேசுவரம் மீனவர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி, சுதந்திர தினமான இன்று ராமேசுவரம் மீனவர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 64 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதோடு, ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்ற 24 பேர் தற்போது தண்டனைக் கைதிகளாக உள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், கைப்பற்றப்பட்ட படகுகளை மீண்டும் வழங்கவும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை உறுதிசெய்யவும், திங்கட்கிழமை முதல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

அதே கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், இன்று (சுதந்திர தினம்) ராமேசுவரம் தங்கச்சிமடம் வலசைத் தெருவில் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மீனவர் பிரதிநிதி சேசுராஜா தலைமை தாங்கினார்.

இதில், கடந்த 42 ஆண்டுகளாக நீடித்து வரும் மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Facebook Comments Box