8 மாதங்களாக மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கான உதவித்தொகை ஒப்புதல் நிறுத்தம்

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள் ஆகியோருக்கான உதவித்தொகை, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வருவாய்த் துறையால் வழங்கப்படுகிறது. தகுதியுடையோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 2023 செப்டம்பரிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500, மற்றவர்களுக்கு ரூ.1,200 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்களுக்கு, முதலில் உதவித்தொகை பெற அனுமதி ஆணை மட்டுமே வழங்கப்படுகிறது. உண்மையான தொகை வழங்கப்படுவதற்கு ஓராண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதிலும் மாற்றுத் திறனாளிகளுக்கே மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு, முதியோர் உள்ளிட்டோருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படவில்லை.

முன்னர், உதவித்தொகை தாமதமாக வழங்கப்பட்டாலும், ஆணை பிறப்பித்த மாதத்திலிருந்து நிலுவைத்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நிலுவைத்தொகை வழங்கப்படுவதில்லை. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கூறியதாவது:

“ஓராண்டுக்கு முன் விண்ணப்பித்த பலருக்கு அனுமதி ஆணை வந்துள்ளது. ஆனால் உதவித்தொகை கிடைக்காமல் காத்திருக்கின்றனர். கடந்த 8 மாதங்களாக புதிய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டால், கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஒப்புதல் தரவில்லை என்கிறார்கள். ஆனால் VAO-கள் ‘ஒப்புதல் தரும் ஆப்ஷன்’வே நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இதனால் மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்ல, முதியோரும் உதவித்தொகைக்காக தவித்து வருகின்றனர்” என்றனர்.

வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

“கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் தரும் ஆப்ஷன் நிறுத்தப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்பு ஆணை பெற்றவர்களுக்கு மட்டும் சில சமயம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் மே மாதத்திற்குப் பிறகு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை” என்றனர்.

Facebook Comments Box