பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஏகனாபுரம் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதிலும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. கீழம்பி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்றார்.
இந்த ஊராட்சியில் 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதற்குப் பிறகு தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத் தலைவர் மலர்க்கொடி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் நித்தியா சுகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர். பின்னர் ஏகாம்பரநாதர் கோயிலில் சம்பந்தி விருந்து நடந்தது. ஆட்சியர் கலைச்செல்வி அதிலும் பங்கேற்றார்.
ஏகனாபுரம் கிராமத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி 1,100 நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர். இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வீராபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா சிறப்பு பார்வையாளராக கலந்து, கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சி தணிக்கை அறிக்கை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெற்றது. பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர், கழிவுநீர் கால்வாய், ஜி.எஸ்.டி. சாலை மேம்பாடு போன்ற கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர். ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் பேருந்து நிலையம் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலாக, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக கட்டிடத்தை அமைக்க வாக்களிக்கப்படுமென ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்டம் முழுவதிலும் 359 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் பெரும்பாலானவற்றில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடந்தன. திருத்தணி அருகே தரணிவராகபுரம் ஊராட்சியில் ஆட்சியர் பிரதாப் சிறப்பு பார்வையாளராக பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) யுவராஜ் பங்கேற்றனர். சோழவரம் அருகே அத்திப்பேடு ஊராட்சியில், எண்ணூர்–மாமல்லபுரம் சாலைக்காக அகற்றப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம், கிராம சேவை கட்டிடம் உள்ளிட்ட 5 கட்டிடங்களை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பை வருவாய் துறையினர் அகற்றவில்லை. இதனால் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.