கீதை உபதேசத்தை மனதில்கொண்டு தர்மத்தை நிலைநாட்டுவோம்: பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கீதை உபதேசத்தை மனதில்கொண்டு தர்மத்தை நிலைநாட்ட இந்நாளில் உறுதியேற்போம் என தெரிவித்தனர். நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.

அதன்படி அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பது:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி:

“ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளான கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலைநிறுத்தி கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம் என்கிறது கிருஷ்ண பகவானின் கீதா.

அந்த உபதேசத்தை மனதில்கொண்டு, கிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில் ஒவ்வொருவரும் அறத்தை போற்றி தர்மத்தை நிலைநாட்ட உறுதியேற்போம். அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.”

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

“கிருஷ்ண ஜெயந்தி திருநாளில், நான் எனது என்ற பற்றை நீக்கி, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதி, கடமைகளைச் சரிவரச் செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம் என்ற கீத உபதேசத்தை மனதில் நிலைநிறுத்தி, மனிதகுலம் மேம்பட நாம் அனைவரும் உறுதியேற்போம்.

உலகம் போற்றும் ஒப்பற்ற நூலான பகவத்கீதையை அருளிய கிருஷ்ண பகவானின் பிறந்தநாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் தழைத்தோங்கட்டும். அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

Facebook Comments Box