திருப்பூர்: வடமாநில பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலருக்கு பாராட்டு!
திருப்பூரில் பணியாற்றும் பெண் காவலர் கோகிலா, ஆட்டோவில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் பாராட்டுக்கள் குவிகின்றன. இந்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில், திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட போலீஸார் சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிகாலை வரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில், அந்த வழியாக வந்த ஆட்டோவில் பெண் கதறி அழுவதை போலீஸார் கவனித்து, அருகில் சென்று பார்த்தபோது கர்ப்பிணி பெண் வலியால் அலறுவதை கண்டு அஞ்சினர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணுக்கு பிரசவம் நெருங்கி, மருத்துவமனை செல்வதற்குள் குழந்தை பிறக்கலாம் என்று தெரிந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கோகிலா, உடனடியாக ஆட்டோவில் ஏறி பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.
மருத்துவமனை செல்வதற்குள் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் தொப்புள்கொடியை அகற்றி தாய் மற்றும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அறிந்த மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் போலீஸார் அனைவரும் நெகிழ்ச்சியை பகிர்ந்தனர். கோகிலா, செவிலியராக பயிற்சி முடித்து விருப்பத்தால் காவல் துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் அழைத்து கோகிலாவுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கோகிலா கூறியது:
“சுதந்திர தினம் காரணமாக மாநகரில் கடுமையான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது வந்த ஆட்டோவில் பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்தார். அவர் வடமாநில பெண் என்பதால் குடும்பத்தினர் எவரும் இங்கு இல்லை. உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் மருத்துவமனைக்கு சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு தெரிவித்தார்.
ஆட்டோவில் செல்லும்போது பிரசவமானது. நான் செவிலியர் பயிற்சி பெற்றதால் அவசரத்தில் பிரசவத்தை பதட்டமின்றி நடத்த முடிந்தது. மருத்துவமனை வருவதற்குள் அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவர்கள் மூலம் தொப்புள்கொடி அகற்றி இருவரையும் சிகிச்சைக்கு சேர்த்தோம்.
செவிலியர் பயிற்சி முடித்து இருந்தாலும், காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் தான் போலீஸாக பணியாற்றுகிறேன். அவசரத்தில் கற்ற கல்வி உதவியது”
கோகிலா சேலம்; தற்போது திருப்பூர் எம்.ஜி.ஆர் நகரில் போலீஸாக பணியாற்றி வருகிறார்.