பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி
பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதியின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த எஸ்.மாரிமுத்து என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
சாதிய ரீதியிலான தீண்டாமை கொடுமைகளை களையும் விதமாக பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களிலும், தேர்தலிலும் முன்னுரிமையுடன் கூடிய இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பட்டியலினத்தவர்களுக்கான பிரிவில் ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா, தேவேந்திரகுளத்தான் உள்ளிட்ட 76 சாதியினர் உள்ளனர். இதில் ஆதிதிராவிடர் என்பதும் ஒரு பிரிவுதான்.
ஆனால், தமிழகத்தில் பட்டியல் சாதியினத்தவர்களுக்கான நலத்துறையை தமிழக அரசு கடந்த 1969-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது. எனவே, ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை பட்டியல் சாதியினர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’. இவ்வாறு அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ப.விஜேந்திரன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், பட்டியல் சாதியினரை எந்த அகராதியின் அடிப்படையில் ஆதிதிராவிடர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.