கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

தமிழக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் சார்பில் பொன்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தொடக்கக் கல்வியில் தமிழ் கற்பிக்கப்படாது என்றும், 6-ம் வகுப்பிலிருந்து ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். வாரத்தில் 2-3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்திவிட வேண்டும் என்பது போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் மொழியை பாடமாக சேர்க்கவும், தமிழ் ஆசிரியர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் பாடத் திட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி முறையிடலாம்” என்று தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு வழங்கினர்.

Facebook Comments Box