பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஏமாந்து போவீர்கள்: திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தம் 10.50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களது கோரிக்கைகளில் முதன்மையானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாகும்.

அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த கோரிக்கை சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழக அரசில் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களில் 1,98,331 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்திலும், 6,24,140 பேர் புதிய ஓய்வூதியதிட்டத்திலும் உள்ளனர்.

சிபிஎஸ் திட்டத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதிவரை 45,625 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். 7,864 பேர் பணியின்போது உயிரிழந்துள்ளனர். 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை எதுவும் கிடையாது. இதர மாநிலங்களில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஓய்வுபெறும் நாளில் இருப்பில் உள்ள 40 சதவீத தொகைக்கு சந்தை மதிப்புக்கு ஏற்ப ஓய்வூதியம் கிடைக்கும். பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் உண்டு.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருப்பது நியாயமல்ல. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எங்களுக்கு தேவை வாக்குறுதி அல்ல, பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான அரசாணை தான் வேண்டும்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணை பொதுச் செயலாளர் கோ.நாகராஜன் கூறும்போது, “புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக மத்திய அரசு எந்த அழுத்தத்தையும் கொடுக்காத நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஒரே கையெழுத்தில் நிறைவேற்றிவிட முடியும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வாக்குறுதி மட்டும் கொடுத்து வென்றுவிடலாம் என்று கருதினால், நிச்சயம் ஏமாந்து போவார்கள். எனவே, இந்த ஆட்சிக் காலத்திலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நம்பிக்கையை பெற முடியாது” என்றார்.

Facebook Comments Box