திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் நடந்த கிட்னி திருட்டு குறித்து விசாரணை : இபிஎஸ் உறுதி

“திமுக எம்எல்ஏ நடத்தும் மருத்துவமனையில் கிட்னி திருடி விற்பனை செய்யப்படுவது பற்றிய விவகாரம், அதிமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாக விசாரிக்கப்படும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை அண்ணா சாலையில் நடைபெற்ற மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணத்தில் பேசிய அவர்,

“அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலை தொல்லியல் துறை கைப்பற்ற முயன்றபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, உச்ச நீதிமன்றம் வரை சென்று கோவிலைக் காப்பாற்றினார்.

திமுக அமைச்சர்களில் பலர் அதிமுகவில் இருந்தவர்கள் தான். டெபுடேஷனில் போயிருக்கிறார்கள் போல. திமுகவில் உழைத்தவர்களை எல்லாம் புறக்கணித்து, அதிமுகவில் இருந்து போனவர்கள் நல்ல இலாகாக்களைப் பெற்று செழிப்பாக இருக்கிறார்கள்.

அதிமுக ஜனநாயக கட்சி. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால், என்னைப்போல் பொதுச்செயலாளராக வர முடியும். திமுகவில் அது சாத்தியமில்லை. அதிமுகவில் உழைத்தால் முதல்வராக கூட வரலாம். ஆனால் திமுகவில் கருணாநிதி குடும்பத்தைத் தவிர யாருக்கும் வாய்ப்பு கிடையாது. முக்கியமான மூன்று பதவிகளையும் குடும்பமே பிடித்திருக்கிறது. மற்றவர்கள் எல்லோரும் அந்தக் குடும்பத்துக்கு ஊழியம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?

எனக்கு பழிவாங்கும் மனநிலை எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால், நான் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது வழக்குகள் தொடுத்திருப்பேன். அப்படி இருந்தால் இன்று பலர் அமைச்சர்களாக இருப்பதே இல்லை. அதிமுக ஒருபோதும் பழிவாங்கும் அரசியல் செய்யாது.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 525 அறிவிப்புகள் வெளியிட்டனர். அதில் 98% நிறைவேற்றப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் “சூப்பர் முதல்வர்” ஸ்டாலின் என்றால் அது கடன் வாங்குவதில்தான். மக்களுக்காக 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடனை பரிசாக கொடுத்திருக்கிறார்.

அரசு காலிப்பணியிடம் ஐந்தரை லட்சம் நிரப்பப்படும் என்றார். ஆனால் வெறும் 50 ஆயிரம் மட்டுமே நிரப்பினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொடுப்போம் என்றார், ஆனால் அதை முழுமையாக மறுத்துவிட்டார். வேலைக்காக போராடியவர்களும் ஏமாந்தனர்.

சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாய் இருக்கிறது என்பதை உங்களுக்கே தெரியும். வணிகர்கள், விவசாயிகள் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலமுறை கேட்டார்கள். நானும் பலமுறை சொன்னேன். ஆனால் நடவடிக்கை எதுவும் இல்லை. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டனர். போலீஸை கண்டு குற்றவாளிகள் பயப்படுவதில்லை. கடந்த ஆறு மாதங்களில் ஆறு காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலைக்கு ராணுவமே வந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி திருடி விற்பனை செய்கிறார்கள். குறைந்த பணத்தில் கிட்னி எடுத்து விற்கிறார்கள். இது வெளியில் தெரிய வந்ததும், திமுக அரசு அந்த மருத்துவமனையில் சோதனை செய்து உறுப்பு மாற்று சிகிச்சையை மட்டும் ரத்து செய்தது. ஆனால் இன்று வரை கைது செய்யவில்லை. யாரும் தவறுதலாக அந்த மருத்துவமனைக்குச் செல்லாதீர்கள். உள்ளே சென்றால், உங்கள் உடலின் உறுப்புகளை எடுத்துவிடுவார்கள்.

அப்படியே யாராவது சென்றிருந்தால், உடலில் உறுப்புகள் இருக்கிறதா என்று ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். அந்த எம்எல்ஏ திமிராக பேட்டி கொடுத்து, “250 க்கும் மேற்பட்ட கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை செய்திருக்கிறேன். அப்படி செய்யவில்லையெனில் உயர்நிலை காரை எப்படி வாங்கியிருப்பேன்?” என்று சொல்கிறார். இது மிகப்பெரிய குற்றம். குற்றத்தை நியாயப்படுத்தி பேசுகிறார். இதை அதிமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாக விசாரிப்போம்” என்றார்.

Facebook Comments Box