எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மன்னை, செந்தூர் விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறுசீரமைப்பு காரணமாக மூடப்பட்டிருந்த 3 மற்றும் 4-வது நடைமேடைகள் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால், விரைவில் அந்த நடைமேடைகள் பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து, மன்னார்குடி செல்லும் மன்னை விரைவு ரயிலும், திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரயிலும் மீண்டும் எழும்பூரில் இருந்து இயங்கத் தொடங்க உள்ளன.
₹734.91 கோடி செலவில் நடைபெறும் இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம், 1 முதல் 11-வது நடைமேடைகளையும் இணைக்கும் நடைமேம்பாலம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, அடித்தளப் பணிகள் முடிவடைந்த 1 மற்றும் 2-வது நடைமேடைகள் கடந்த 4-ம் தேதி திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேஜஸ் மற்றும் புதுச்சேரி விரைவு ரயில்கள் எழும்பூரிலிருந்து மீண்டும் இயக்கப்பட்டன.
இந்நிலையில், 3 மற்றும் 4-வது நடைமேடைகளின் பணிகளும் நிறைவடைந்துள்ளதால், அவை விரைவில் திறக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“பணிகள் முடிந்த நிலையில், ஒப்பந்த நிறுவனம் நடைமேடைகளை 21-ம் தேதி காலை ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறது. அதன்பின், மன்னை மற்றும் செந்தூர் விரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து மீண்டும் இயக்கப்படும்” எனவும் அவர்கள் கூறினர்.