உக்ரைன் பாதுகாப்புச் சுமையை இனி ஐரோப்பிய நாடுகளே ஏற்க வேண்டும்: ஜே.டி. வான்ஸ்
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இப்போதிலிருந்து ஐரோப்பிய நாடுகளே சுமக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோரை தனித்தனியாக தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, இனி உக்ரைன் பாதுகாப்புப் பொறுப்பு ஐரோப்பிய நாடுகளின் மேல் தான் இருக்க வேண்டும் என துணை அதிபர் வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியையே நம்பி ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறது. எனினும், இனி வான்வழி பாதுகாப்பு அளிப்பதில்தான் அமெரிக்கா தன்னைச் சுருக்கிக் கொள்ளும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். கீவ் நகரம் மற்றும் உக்ரைன் பாதுகாப்புக்காக இனி வெள்ளை மாளிகை வெறுமனே “பிளாங்க் செக்” கொடுத்து கொண்டிருக்காது என்றும், அதற்குப் பதிலாக ஐரோப்பிய கூட்டாளிகள் தான் அதிக சுமையை ஏற்க வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளும் ஒரு புதிய கூட்டமைப்பை அமைத்துள்ளன. அதில் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய விரும்பும் நாடுகள் இணையலாம் எனத் தீர்மானித்துள்ளன.
இந்த சூழலில், ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியதாவது:
“இந்தப் போரின் முழுச் சுமையையும் அமெரிக்கா மட்டும் சுமக்க வேண்டியதில்லை. இதில் ஐரோப்பாவே முக்கிய பங்காற்ற வேண்டும் என்பது அதிபர் டிரம்பின் நிலைப்பாடு. உக்ரைன் ஐரோப்பிய கண்டத்தில் உள்ளது; எனவே அது அவர்களது பாதுகாப்புக்கே அதிகம் தொடர்புடையது. எதிர்காலத்திலும் அவர்களே அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்.” என்றார்.
தற்போது ரஷ்யா, உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியுள்ளது. மேலும் சில பகுதிகளைவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், “போர் நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னதாக நில உரிமைகள் குறித்து ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும்” என டிரம்ப் வலியுறுத்துகிறார். ஆனால் உக்ரைன், “எங்கள் நிலத்தின் எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது” என்ற கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எனினும், ரஷ்யாவை நேரடியாக எதிர்கொள்ளும் அளவுக்கு உக்ரைனிடம் போதிய படைத்திறன் இல்லாத நிலை தொடர்கிறது. அதேசமயம், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை குறுகிய காலத்திலேயே மீட்கும் வாய்ப்புகளும் மிகவும் குறைவு என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.