“ஆட்சியை வென்று பிடித்துக் காட்டட்டுமா?” – தொண்டர்கள் கூட்டத்தில் விஜய் சவால்
மதுரையில் நேற்று மாலை நடைபெற்ற தவெக மாநில மாநாட்டில், பாஜகவும் திமுகவையும் விஜய் கடுமையாக விமர்சித்தார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிக் காட்டுவேன் என உணர்ச்சி பூர்வமாகக் கூறினார்.
மதுரை பாரப்பத்தியில் நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் உரையாற்றிய விஜய், “தவெக நடத்தி வரும் அரசியல் உண்மையானது, மக்களுக்கானது. 1967, 1977-ல் தமிழகத்தில் அரசியல் புரட்சிகள் நிகழ்ந்தது போலவே, 2026-இலும் அதுபோன்ற மாற்றம் வரப்போகிறது என்பதை இந்தக் கூட்டமே உறுதி செய்கிறது” என்றார்.
“கூட்டம் பெரிது, ஆனால் ஓட்டாக மாறுமா என கேட்கிறார்கள். தவறான கணக்கு போடாதீர்கள். இந்தக் கூட்டம் வெறும் கூட்டமல்ல; அது மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான வேட்டை, எங்களை ஆட்சிக்குக் கொண்டு செல்லும் பாதை. ஆட்சியை பிடிக்க முடியுமா என்கிறார்கள். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, நான் ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா?” என சவால் விட்டார்.
மேலும் அவர், “நாங்கள் மக்களின் இதயமாக, அவர்களின் வீடுகளில் உறவாக இருக்கிறோம். மக்களோடு மட்டுமே நமக்கு கூட்டணி. நமது கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக. மறைமுக நலனுக்காக எவருக்கும் பயப்பட மாட்டோம். இளைஞர்கள், பெண்கள், மக்கள் அனைவரும் நம்மோடு உள்ளனர். 2026-இல் போட்டி இரண்டு பேருக்கே – தவெக, திமுக” என்றார்.
பாஜக அரசு தமிழகத்துக்கு செய்யும் அநீதிகளை சுட்டிக்காட்டிய அவர், “கச்சத்தீவை மீட்டுக் கொடுக்கவில்லை, நீட் விலக்கு மறுக்கப்படுகிறது, கீழடி நாகரிகத்தை மறைக்கிறது. எம்ஜிஆர் காலத்தில் யாரும் முதல்வர் ஆசைப்பட முடியவில்லை; ஆனால் அவர் தொடங்கிய கட்சி இன்று தொண்டர்களையே ஏமாற்றுகிறது. பாஜக – அதிமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி” எனக் கூறினார்.
ஸ்டாலின் அரசை குறிவைத்து, “உங்கள் ஆட்சி நியாயமா? ஊழல் இல்லாததா? பெண்களுக்கு பாதுகாப்பா? டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எல்லாவற்றையும் மூடிவிடலாம் என நினைக்கிறார்கள். மக்கள் சொல்லட்டும், வாக்குறுதியை நிறைவேற்றினார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
தனது அரசியல் பயணத்தை விளக்கி, “அடைக்கலம் தேடி வரவில்லை; படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் காலடி வைத்த பிறகே கட்சியை தொடங்கினேன். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் என் முகம்தான் உங்கள் சின்னம்” என வலியுறுத்தினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஜனநாயக விரோதம் என கண்டனம்.
- தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தல்.
- பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும்.
- காதல் கொலைகளை தடுக்கும் வகையில் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
- காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் அல்லாமல் டிஎன்பிஎஸ்சி வழியே நிரப்ப வேண்டும்.
- மீனவர்கள் கைது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்.
- சட்டம், ஒழுங்கு சீர்குலைவுக்கு திமுக அரசுக்கு கண்டனம்.
- பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலுக்கு கண்டனம்.
மாநாடு நிறைவில், நடுவழியாக நடைபயணம் செய்து வந்த விஜய்க்கு தொண்டர்கள் அதீத உற்சாக வரவேற்பு அளித்தனர்.