“அறியாமையால் பேசுகிறார்… பாவம்!” – விஜயின் விமர்சனத்திற்கு பழனிசாமி பதில்
மதுரை தவெக மாநாட்டில் அதிமுக குறித்து விஜய் விமர்சித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக யாரின் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம், அறியாமையால் தான் அப்படி பேசுகிறார்” எனக் கூறினார்.
இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “அதிமுக மக்கள் சேவைக்காக எம்.ஜி.ஆர் தொடங்கிய இயக்கம். ஏழைகளின் சிரிப்பிலே இறைவனை கண்ட அண்ணாவின் கனவை எம்.ஜி.ஆர் நிறைவேற்றினார். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்கள். அவர்கள் எண்ணற்றத் திட்டங்களை மக்களுக்காகச் செய்தவர்கள்.
புதிய கட்சி தொடங்குவோர் கூட நம் தலைவர்களின் பெயரைச் சொல்லித்தான் தொடங்குகிறார்கள். அதிமுக யாரின் கையில் இருக்கிறது என்று கேட்பவர்கள், அறியாமையில் பேசுகிறார்கள். இது கூட தெரியாமல் தலைவராக இருப்பவர்கள், தொண்டர்களின் நம்பிக்கையை எப்படி பெற்றுக்கொள்வார்கள்?
அதிமுக ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை வகுத்து முன்னேறிய கட்சி. மரம் உடனே வளராது; அப்படித்தான் ஒரு இயக்கமும். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லாரும் உழைப்பின் மூலமே ஆட்சியை அடைந்தார்கள். நம் தலைவர்கள் அர்ப்பணிப்பின் மூலம் அதிமுகவை மக்களின் மனதில் பதித்தார்கள். அதனால்தான் தமிழகத்தை உயர்த்திய பல்வேறு திட்டங்களை அதிமுக வழங்கியது” என்றார்.
மேலும், “அதிமுக ஆட்சியில் கல்விக்கு மறுமலர்ச்சி கிடைத்தது. 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், 67 கலை அறிவியல் கல்லூரிகள், பல தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டன. ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க அடித்தளமிட்டது அதிமுக அரசு. உழைப்பின் அடிப்படையில்தான் நாங்கள் முன்னேறினோம். சிலர் உடனே சாதனை செய்ததாகக் கூறினாலும் அது நிலைக்காது. உழைப்புதான் நிரந்தரம்.
தமிழகத்தில் திமுகவை வீழ்த்தும் சக்தி உடைய ஒரே கட்சி அதிமுக. அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக. அதிக உறுப்பினர்களைக் கொண்டது அதிமுக. பொன்விழா கண்ட இயக்கம் இதுவே. அதிமுகவை யாராலும் குலைக்க முடியாது” என வலியுறுத்தினார்.
விஜயின் குற்றச்சாட்டு:
முன்னதாக, மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் விஜய், “எம்ஜிஆர் தான் தமிழகத்தின் மாஸ் தலைவர். எதிரியையே கெஞ்ச வைத்தவர். ஆனால் அவர் தொடங்கிய கட்சி இப்போது எப்படியுள்ளது? யார் கையில் உள்ளது? தொண்டர்கள் வேதனையில் தவிக்கிறார்கள். பாஜகவின் யுக்திகள் இங்கு வேலை செய்யாது” என்று விமர்சித்திருந்தார்.