சென்னையில் கனமழை – தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம், போக்குவரத்து சிரமம்

தமிழகத் தலைநகர் சென்னை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பரவலாக மழையை பெற்றது. இதன் விளைவாக நகரின் பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, மக்கள் சிரமம் அனுபவித்தனர்.

அதிகாலை முதலே இடி, மின்னலுடன் மழை பெய்தது. வடபழனி, பல்லாவரம், அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், அசோக் நகர், தியாகராய நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பதிவானது.

சில இடங்களில் குறுகிய நேரத்தில் 5 செ.மீ. அளவிற்கு மழை பெய்துள்ளது. மந்தைவெளி பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த திடீர் மழைக்கு வெப்பச் சலனமே காரணம் என தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

மழையால் சாலைகளில் நீர் தேங்கி, வாகனங்கள் மெதுவாக இயங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலை நாள் என்பதால் அலுவலகம், பள்ளி செல்லும் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வடகடலோரப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மழை பெய்யும் என பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Facebook Comments Box