குமரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்
கன்னியாகுமரி தெற்கு ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி, கடியபட்டணம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் கடற்கரை கிராமத்தில் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். கடியபட்டணம் பேதுரு பவுல் ஆலயம் முன்பிருந்து திரளான பெண்கள் உள்பட மீனவர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, கைகளில் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டபடி பேரணி சென்றனர்.
இந்தப் பேரணி முக்கிய தெருக்களை கடந்து பேரூந்து நிலையம் சென்று, அங்கிருந்து கடற்கரை மைதானம் சென்றடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாதிரியார் ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தார். பிரின்ஸ் எம்எல்ஏ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசியார். முட்டம் மறை வட்ட முதன்மை பணியாளர் சகாய சீலன் ஸ்டான்லி மற்றும் மீனவர்கள் குடும்பத்துடன் திரளானோர் கலந்துகொண்டனர்.
போட்டோ கேப்ஷன்:
குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குடும்பத்துடன் இன்று போராட்டம் நடத்திய மீனவர்கள்