காவிரியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 50,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பு இன்னும் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் முதன்முறையாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 29-ஆம் தேதி நிரம்பியது. டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பினால், அணையின் நீர் மட்டம் குறைவதும், காவிரியில் வெள்ளம் ஏற்பட்டபோது, அணை மீண்டும் நிரம்புவதும் நடக்கின்றது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,223 கனஅடி நீர் வந்திருந்தது; நேற்று காலை அது 7,382 கனஅடியாக அதிகரித்தது. பாசனத்துக்காக விநாடிக்கு 22,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடகாவின் கபினியில் இருந்து விநாடிக்கு 25,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 1,00,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று மாலை 4 மணிக்கு விநாடிக்கு 12,657 கனஅடியாக அதிகரித்தது.
நீர்வரத்து வேகமாக அதிகரிப்பதால், முன்னெச்சரிக்கையாக, மேட்டூர் அணையில் இருந்து மாலை 4 மணிக்கு 35,000 கனஅடி மற்றும் மாலை 6 மணிக்கு 50,000 கனஅடி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்பட காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு நீர்வளத்துறை சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.