கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ.30 கோடியில் கட்டப்பட்ட சுரங்கப்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
சென்னை, கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ.30.13 கோடியில் கட்டப்பட்ட வாகன சுரங்கப்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். வடசென்னையின் கொருக்குப்பேட்டை பகுதியில், போஜராஜன் நகரம் ரயில்வே பாதைகளால் மூன்று புறமும் சூழப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ரயில்வே கடவுப் பாதை மூலமே வெளியே செல்ல முடியும். அவசர நிலைகளில் வெளியே செல்வது கடினமாக இருந்தது.
இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கேட்டிருந்த கோரிக்கையை முன்னிட்டு, போஜராஜன் நகரில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி 2023-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சி நிதியுடன் ரூ.30.13 கோடியில் தொடங்கப்பட்டது. சுரங்கப்பாதையின் நீளம் 207 மீட்டர், அகலம் 6 மீட்டர். மழைக்காலங்களில் நீர் வெளியேற்ற கிணறு, 85 எச்பி திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையின் மூலம் போஜராஜன் நகரம், சீனிவாசன் நகர் மற்றும் மின்ட் மார்டன் சிட்டி பகுதிகளில் வசிக்கும் சுமார் 1 லட்சம் மக்கள் பயன் பெறுவர். மேலும், ரூ.1.41 கோடியில் குழந்தைகள் விளையாட்டுத் திடல், ரவுண்டானா பூங்கா மேம்பாடு, நடைபாதை மற்றும் பொதுமக்கள் அமர்வுக்காக ஓய்வுக் கூடம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாலம் மற்றும் விளையாட்டுத் திடல் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே.சேகர் பாபு மற்றும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா முன்னிலையில் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். விழாவில் எம்எல்ஏக்கள் ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், துணை மேயர் மு.மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கலந்து கொண்டனர்.