வில்லிவாக்கத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு
வில்லிவாக்கம் பகுதியில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் ஹரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், வில்லிவாக்கம் ஒத்தவாடி தெருவில் விநாயகர் சிலை வைத்து சதுர்த்தி கொண்டாட காவல்துறையிடம் விண்ணப்பித்தும், இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டது.
இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், அந்த இடம் மிகவும் குறுகலானது என்றும், சிலை வைக்க உரிமையாளர் அனுமதி வழங்கியுள்ளாரா என்பது தெளிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே இடத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதாக வாதிடப்பட்டது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, வில்லிவாக்கம் பகுதியில் விநாயகர் சிலை வைத்து சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.