நாமக்கலில் கல்லீரல் முறைகேடு: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு
நாமக்கல் மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடு நடந்ததாக வெளிவந்த புகாரை தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள், பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தானமாக வழங்கப்படுகின்றன. உயிருடன் இருப்பவர்கள் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்ய முடியும். ஆனால், இடைத்தரகர்கள் ஏழ்மையில் உள்ளவர்களை பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பணம் பெற விற்பனை செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சிறுநீரக முறைகேடு அதிகம் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்தது. இதனால், அந்த முறைகேட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதைத்தாண்டி வேறு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில், இப்போது கல்லீரல் முறைகேடு சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாமக்கல் அலமேடு பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண், கடனை அடைப்பதற்காக புரோக்கர்கள் மூலம் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது கல்லீரலின் ஒரு பகுதியை விற்றதாக புகார் அளித்துள்ளார். இது மருத்துவ துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க, சிறுநீரக முறைகேடு தொடர்பான விசாரணையையும் நடத்திய ஐஏஎஸ் அதிகாரியும், சுகாதாரத் திட்ட இயக்குநருமான வினித் தலைமையில் விசாரணை நடத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கல்லீரல் முறைகேடு தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு புரோக்கர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை ஆய்வறிக்கையில் யார் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகள் தொடர்புடையதாக இருந்தாலும் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.