மதுரை தவெக மாநாட்டு திடல் முழுமையாக தயார் – 3,000 போலீஸார், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பில்

ஆகஸ்ட் 21-ஆம் தேதி (நாளை மறுநாள்) மதுரை பாரபத்தியில் நடைபெறவிருக்கும் விஜய்யின் தவெக மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி, திடல் முழுமையாக தயார் நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை–தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள பாரபத்தியில் நடைபெறும் தவெக இரண்டாவது மாநில மாநாட்டுக்காக 500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மேடை, எல்இடி திரைகள், பார்வையாளர் கேலரிகள், வாகன பார்க்கிங், கழிப்பறைகள், குடிநீர், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ், மின்விளக்குகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டுத் திடல் பணிகளை மதுரை மாவட்டச் செயலாளர்கள் கல்லாணை, தங்கப் பாண்டி உள்ளிட்டோர் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தின் தலைமையில் ஒருங்கிணைத்து வருகின்றனர். மாநாட்டு திடலை மதுரை எஸ்பி ஆனந்த் நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து மாற்று வழித்தடங்கள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். மாநாட்டு திடலை கடந்து செல்லும் வாகனங்களுக்கு தனி வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டுக்காக 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். வெளியூரிலிருந்தும் காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர். அதோடு, 2,000-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் மற்றும் 500 பெண் பவுன்சர்களும் தவெக சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநாட்டின் பரபரப்பை கூட்டும் வகையில், மதுரையின் பல்வேறு இடங்களில் “தளபதி எப்பவுமே அவுட் ஆஃப் கன்ட்ரோல்”, “மக்களின் முதல்வரே”, “முதல்வர் வேட்பாளரே” போன்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாநில மாநாட்டை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான முக்கிய ஆலோசனையை இன்று பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்தியதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box