“போதைப்பொருள் ஒழிப்பு… கடைசிவரை ‘ஓ’ போட்டதுதான் மிச்சம்” – இபிஎஸ் கடும் விமர்சனம்

தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட டிஜிபி, அவர் ஓய்வு பெறும் வரைக்கும் அதை ஒழிக்க முடியவில்லை. கடைசி வரை ‘ஓ’ என்ற ஸ்லோகன்களை மட்டுமே கூறியதுதான் நடந்தது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

வேலூரில் நடைபெற்ற “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” பிரச்சார பயணத்தில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பேசிய அவர்,

*“தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது. அதைக் கட்டுப்படுத்த இந்த அரசு முடியவில்லை. ஆளும் கட்சியினருடன் தொடர்பு இருப்பதால் காவல்துறையாலும் தடுக்கும் நிலை இல்லை. முதலமைச்சர் தான் கொள்கை விளக்க உரையில், பள்ளி–கல்லூரி அருகே 2,348 இடங்களில் கஞ்சா விற்றதாக கூறினார். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் 148 பேர் மட்டுமே. மீதமுள்ளவர்கள் யார்? எல்லாம் ஆளும் கட்சியினர்தான்.

அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை, திமுக அரசு ரத்து செய்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டங்கள் அனைத்தும் தொடரும். திமுக 2,000 அம்மா கிளினிக்குகளை மூடியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 4,000 புதிய அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு தான் மது கிடைக்கிறது. இதனால் தினமும் 15 கோடி, மாதத்திற்கு 450 கோடி, வருடத்திற்கு 5,400 கோடி, நான்கு ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி மேலிடத்துக்கு செல்கிறது. இப்படிப்பட்ட ஆட்சி நீடிக்க வேண்டுமா?”* என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர்,

*“போதைப்பொருளை கட்டுப்படுத்த வந்த டிஜிபி 2.0, 3.0, 4.0 என்று கடைசிவரை ‘ஓ’ போட்டதுதான் நடந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் ஓய்வு பெறும் வரைக்கும் போதைப்பொருள் பிரச்சனை நீடித்தது.

திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பணம் பெற்று தான் இயங்குவதாக, தேர்தலில் நிதி வழங்கியதாக பத்திரிகையில் செய்தி வந்தது. அது உண்மை அல்ல என்றால் அவர்கள் விளக்கம் தர வேண்டும்.

பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தது தவறல்ல. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசனுக்கு எங்களை விமர்சிக்க தகுதி இல்லை. அவர் என்னை எனது தொகுதியில் தோற்கடிப்போம் என கூறியுள்ளார். நான் சொல்கிறேன் – அவருடைய அப்பாவே வந்தாலும் என்னை என் தொகுதியில் தோற்கடிக்க முடியாது.

2021 தேர்தலில் சேலம் மாவட்டம் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை வென்றோம். எடப்பாடியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். காலத்துக்கு ஏற்ப நிறம் மாறும் கட்சி நாங்கள் இல்லை. அதிமுக எப்போதும் கொள்கையின் அடிப்படையில் செயல்படும்”* எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, முக்கூர் சுப்பிரமணியன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, அதிமுக அமைப்புச் செயலாளர் ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box