டிஜிபி நியமன தாமதத்தில் அரசின் உள்நோக்கம் உள்ளது – பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக பரிந்துரைப் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது உள்நோக்கத்துடனே நடைபெறுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்ட அவர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
- அதிமுக ஆட்சிக் காலத்தில் விலைவாசி அதிகரித்தபோது, ரூ.100 கோடி நிதியை ஒதுக்கி, குறைந்த விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களுக்கு வழங்கினோம். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஆனால், திமுக ஆட்சியில் விலைவாசி கட்டுப்பாட்டில் இல்லை.
- கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு இரண்டு மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய நிலையில், திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
- டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். ஆனால், புதிய டிஜிபி நியமனத்திற்கான பெயர்ப் பட்டியலை தமிழக அரசு மத்திய அரசுக்கு இதுவரை அனுப்பவில்லை. இதில் அரசின் உள்நோக்கம் வெளிப்படுகிறது.
- கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது; ஆறு காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
- திமுக ஆட்சியில் மின்சாரக் கட்டணம் 67 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என அனைத்துவிதமான வரிகளும் 100 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளன.
- 4 ஆண்டுகளில் ரூ.4.38 லட்சம் கோடி கடன் எடுத்து, நாடு முழுவதும் கடன் எடுப்பதில் தமிழகமே முதலிடம் பெற்றுள்ளது.
மேலும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘தாலிக்கு தங்கம்’ திருமண உதவித் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்; மணப்பெண்ணுக்கு பட்டுச் சேலை, மணமகனுக்கு பட்டு வேஷ்டி வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Facebook Comments Box