தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட 77% முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்தன: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 77 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“தமிழகத்தை நோக்கி நாள்தோறும் புதிய திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானவுடன், அவை செயல்படுவதற்கான அனுமதிகள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க செயல்பாட்டு விகிதம் (Conversion Rate) கிடைத்துள்ளது.
2024 முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 525, அதாவது 80% நிறைவேற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த ‘தமிழ்நாடு எழுகிறது’ மாநாட்டில் மட்டும் ரூ.32,554 கோடி மதிப்பில் முதலீடுகள், 49,825 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அடுத்த மாநாடு ஓசூரில் நடைபெற உள்ளது.
2021 முதல் 2025 வரை ரூ.10.33 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இம்மூலம் உருவாகும் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டின் மக்களுக்கே வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்றார் அமைச்சர்.