விநாயகர் சதுர்த்தி விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்து கட்டண உயர்வு: பயணிகள் அதிருப்தி
விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் வேலை, படிப்பு காரணமாக தங்கியிருப்பவர்கள், விடுமுறை கிடைக்கும் போது சொந்த ஊர்களுக்கு செல்லுவது வழக்கம். இந்த ஆண்டில் வரும் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. ஒரே ஒரு நாள் விடுமுறையாக இருந்தாலும், அதனுடன் மேலும் இரண்டு நாள் விடுப்பு இணைத்து பலர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக, சென்னை – திருச்சி பயணத்திற்கு அதிகபட்சமாக ரூ.4,000 வரை கேட்கப்படுகிறது.
ஆம்னி பேருந்து சங்கத்தின் கட்டணப் பட்டியலின்படி, இருக்கை வசதிக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.1,320 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது ரூ.3,000 வரை உயர்ந்துள்ளது. அதேபோல், சொகுசு படுக்கை வசதிக்கான கட்டணம் ரூ.1,840 என சொல்லப்பட்டிருந்த நிலையில் ரூ.4,000 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், விநாயகர் சதுர்த்திக்கு முன் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்லவும், ஆகஸ்ட் 31 அன்று திருச்சியிலிருந்து சென்னைக்கு திரும்பவும் ஒரே அளவு கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் விளக்கமளித்தபோது, “விழா காலங்களில் தான் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் சாதாரண நாட்களில் ஏற்படும் இழப்பை, அந்நாட்களில் மட்டுமே சரி செய்ய முடிகிறது. எங்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிப்பதில்லை. யாராவது அவ்வாறு வசூலித்தால் நாங்களே போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கிறோம். மேலும், விநாயகர் சதுர்த்தி நாளில் குறைந்த கட்டணத்திலும் பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றிற்கான முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தனர்.
இதேபோல் அரசு போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், “தொடர் விடுமுறையைக் கருத்தில் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக படுக்கை வசதியுள்ள பேருந்துகளை அதிகரிக்க முயற்சி எடுத்து வருகிறோம். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்” என தெரிவித்தனர்.