35 அரசுத் துறைகளில் ஏஐ வளர்ச்சிக்கான பயிலரங்குகள் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், 35 அரசுத் துறைகள் மற்றும் 38 புத்தொழில் நிறுவனங்களில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் மூலம் பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஐடிஎன்டி மையம், ஐசிடி அகாடமி மற்றும் எல்காட் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புதுமைகள் மூலம் ஆட்சித் திறனை மேம்படுத்தும் நோக்கில், ரூ.13.93 கோடி மதிப்பில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சமூக சவால்களை எதிர்கொண்டு, மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில், தேவையான பயிற்சி வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டை ஏற்படுத்துதல், மருத்துவம், பாதுகாப்பு, ஆட்சித் துறை உள்ளிட்ட துறைகளில் உருவாகும் சிக்கல்களுக்கு ஏஐ தீர்வுகளை வழங்கும் சூழலை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, ஐசிடி அகாடமி, ஐடிஎன்டி மையம் மற்றும் எல்காட் நிறுவனத்துடன் இணைந்து, 35 அரசுத் துறைகள் மற்றும் 38 புத்தொழில் நிறுவனங்களில் ஏஐ தொடர்பான பயிலரங்குகள் நடத்தப்பட்டன.
இதன் மூலம் 30 முக்கிய செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், மருத்துவம், வேளாண்மை, கல்வி, மின்ஆளுமை போன்ற துறைகளில் ஏஐ வழியே தீர்வுகள் காண்பது, முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஏஐ மற்றும் இயந்திரவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, தமிழ்நாடு தரவு பகிர்வு தளத்தை மேம்படுத்துவது, திறன் போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களில் ஏஐ திறன்களை வளர்த்தெடுப்பது ஆகிய நடவடிக்கைகளும் இந்த இயக்கம் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.