தமிழகத்தில் வெப்பநிலை 5 டிகிரி வரை அதிகரிக்கும் வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், வடமேற்கு வங்கக் கடல் பரப்பில் இன்று ஒரு தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று சில இடங்களில், நாளை முதல் 28 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட சுமார் 5 டிகிரி ஃபாரன்ஹீட் உயரக்கூடும். சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 முதல் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதன்பின், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.